Parathiyar Kavithigal

Kavithaigal




 
 

 
 
 
 
 


 
கண்ணன் பாட்டு

கண்ணம்மா -- என் காதலி

காட்சி வியப்பு

(
செஞ்சுருட்டி-ஏகதாளம்.
ரசங்கள்: சிருங்காரம்; அற்புதம்)

சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் -- புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் -- தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!






1
சோலைமல ரொளியோ -- உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே -- உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை -- உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ, -- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.






2
சாத்திரம் பேசுகிறாய், -- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே, -- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் -- வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ? -- இது பார்,
கன்னத்து முத்தமொன்று!
 

No comments:

Post a Comment